பொங்கல் விற்பனையால் கலை கட்டிய தியாகராய நகர்.. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க சென்னை ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். மெட்ரோ பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகள் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை என்பதால், பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சென்னை தி.நகரில், புத்தாடை வாங்குவதற்காகவும், பொங்கலுக்கு தேவையான மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும், சென்னை ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் குவிந்தனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளாமானோர் குவிந்ததால் பலத்த பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
அதிக அளவில் கூட்டம் கூடியதால், காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கியில் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வகையில் கேட்டுக்கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னை மாநகர காவல் துறை அந்த பகுதியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கின்றது.
ரங்கநாதன் தெருவை பொறுத்தவரை கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் காவல்துறையினர் காலை முதல் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே காவல்துறையினர் கூட்டத்தை சீர்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டனர்.
தியாகராய நகர் பகுதியில் ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றது இந்த நிலையில் இந்த பகுதியில் போக்குவரத்து பயன்பாட்டிற்காக வடக்கு உஸ்மான் ரோடு பகுதியில் மேம்பால பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன இதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக வழக்கமாக வரும் கூட்டம் இந்த ஆண்டு இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
What's Your Reaction?