IND vs SL Match Highlights : 2 வீரர்களிடம் சரணடைந்த இந்தியா.. 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

IND vs SL 2nd ODI Match Highlights : இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Aug 4, 2024 - 22:16
Aug 6, 2024 - 21:16
 0
IND vs SL Match Highlights : 2 வீரர்களிடம் சரணடைந்த இந்தியா.. 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி
இந்திய வீரர்களை வெளியேற்றிய மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள்

IND vs SL 2nd ODI Match Highlights in Tamil : இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி, கொலும்புவில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 40 ரன்களும், துனித் வல்லெலகே 39 ரன்களும், குசல் மெண்டில் 30 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை, அக்‌ஷர் பட்டேல் மற்றும் மொஹமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஒரு கட்டத்தில் 35 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி, கடைசி 15 ஓவர்களில் 104 ரன்கள் குவித்தது. இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீசியது தான். அவர் 2 ஓவர்கள் வீசி 11 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாகவே ஆடினர். அதிலும் குறிப்பாக கேப்டன் ரோஹித், 29 பந்துகளில் [5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] அரைசதம் விளாசினார். பின்னர் 64 ரன்களில் வெளியேறினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவித்தனர்.

பின்னர் சில நிமிடங்களிலேயே சுப்மன் கில் 35 ரன்கள் எடுத்து வாண்டர்சே பந்துவீச்சில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் எவருமே நிலைத்து ஆடவில்லை. களத்திற்கு வருவதும், பெவிலியனுக்கு திரும்புவதுமாக அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.

ஷிவம் துபே (0), விராட் கோலி (14), ஷ்ரேயாஸ் ஐயர் (7), கே.எல்.ராகுல் (0) என அடுத்தடுத்து வெளியேறி சொதப்பினர். அபாரமாக பந்துவீசிய ஜெஃப்ரி வாண்டர்சே முதல் 6 விகெட்டுகளையும் வெளியேற்றி சாதனை படைத்தார்.

அதன் பின்னர் சிறிதுநேரம் அணிக்கு நம்பிக்கை கொடுத்த அக்‌ஷர் பட்டேல் 44 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின்னர் இந்திய அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. வாஷிங்டன் சுந்தர் (15), மொஹமது சிராஜ் (4), என 3 பேரையும் சரித் அசலங்கா வெளியேற்றினார். இறுதி விக்கெட்டாக அர்ஷதீப் சிங் 3 ரன்களில் ரன்அவுட் ஆகி வெளியேற 208 ரன்களுக்குள் சுருண்டது.

முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி அடுத்த 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆகப்பெரிய கொடுமை. ஆட்டநாயகன் விருதினை 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜெஃப்ரி வாண்டர்சே தட்டிச்சென்றார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow