Egypt Fencer Nada Hafez Participate in Paris Olympics 2024: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து வருகின்றன. ஜூலை 26ம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். இதுவரை நடந்த போட்டிகளின்படி சீனா 7 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்க வேட்டையில் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜப்பான் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 2ம் இடத்தில் உள்ளது.
நமது இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 2 வெண்கலம் வென்றுள்ளது. இந்த 2 வெண்கல பதக்கத்தையும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.
நமது வீராங்கனை மனு பாக்கர் தனி ஆளாக இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் வென்று கொடுத்துள்ள நிலையில், 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சு போட்டியில் பங்கேற்று அசத்தி இருக்கிறார் ஒரு வீராங்கனை. அவர்தான் 26 வயதான நடா ஹஃபீஸ். எகிப்து நாட்டை சேர்ந்த நடா ஹஃபீஸ், தனது முதல் போட்டியில் அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கியை 15-13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இருந்தார்.
அதே வெற்றி வேட்கையுடன் காலிறுதி சுற்றுக்கு முந்தைய போட்டியில் தென் கொரியாவின் ஜியோன் ஹயோங்வை எதிர்கொண்ட நடா ஹஃபீஸ் தோல்வியை தழுவினார். இந்த போட்டிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடா ஹஃபீஸ், தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தகவல் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அதாவது நடா ஹஃபீஸ் வெளியிட்ட பதிவில், ''மேடையில் 2 பேர் விளையாடுவதை (நானும், போட்டியாளரும்) நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அங்கு உண்மையில் விளையாடியது 3 பேர். அதாவது நான், எனது போட்டியாளர் மற்றும் இன்னும் நம்முடைய உலகை பார்க்காத என்னுடைய குட்டி பாப்பா. நானும், எனது பேபியும் சந்தித்து போட்டியில் உடல்ரீதியாக, மனரீதியாக சவால்களை சந்தித்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
வாள்வீச்சு போட்டி என்பது மிகவும் ஆபத்தான போட்டிகளில் ஒன்றாகும். மிகவும் பிரத்யேகமான உடையணிந்துதான் இந்த போட்டியில் பங்கேற்க முடியும். ஆனாலும் நடா ஹஃபீஸ் வயிற்றில் குழந்தையுடன் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளது உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நடா ஹஃபீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது இது 3வது முறையாகும். இவர் ஏற்கெனவே 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக், 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடா ஹஃபீஸுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.