ஸ்டாலினுடன் கைகோர்த்த 3 மாநில முதல்வர்கள்.. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

NITI Aayog Meeting 2024 : ''தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

Jul 23, 2024 - 21:27
Jul 24, 2024 - 10:56
 0
ஸ்டாலினுடன் கைகோர்த்த 3 மாநில முதல்வர்கள்.. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு!
Stalin And 3 State Chief Minister Boycott Niti Aayog Meeting

NITI Aayog Meeting 2024 : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பும், புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும் என்ற அறிவிப்பும், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு என்ற அறிவிப்பும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

அதே வேளையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநிலத்துக்கும், நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்துக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. மிக முக்கியமாக தமிழ்நாடு, தமிழ் என்ற பெயரை கூட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் உச்சரிக்கவில்லை. இது மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் பட்ஜெட்டில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டன.

''ஆட்சி அதிகாரத்தை காப்பற்றிக் கொள்வதற்காக,  சந்திரபாபு நாயுடு,  நிதிஷ்குமாருக்கு சாதகமாக மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு ஏதும் இல்லை'' என்று காங்கிரஸ் எம்.பி  ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்திய பாஜக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதேபோல் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது இந்தியாவின் கூட்டாண்மை தத்துவத்துக்கே எதிரானது என்று குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறாதது தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக அரசு ஆத்திரத்தில் உள்ளது என்பதை காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் தனது கோபத்தை வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், ''தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம்.பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் திமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்துவார்கள்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினை பின்பற்றி, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவேந்த் ரெட்டி மற்றும் இமாச்சல பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு ஆகியோர் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow