Hearvy Rain in Chennai : ஜூலை மாதம் ஆரம்பம் முதலே சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால், எப்போது மழை பெய்யும் என்பதே புரியாத புதிராக உள்ளது. கடந்த வாரம் ஓரிரு நாட்களில் மாலையிலும் இரவு நேரங்களிலும் மட்டுமே மழை பெய்தது. மற்ற நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் மந்தாரமாக காணப்பட்டது. அதன்பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரித்ததோடு, இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருப்பதாக சென்னைவாசிகள் கவலையில் இருந்தனர்.
இன்றும் காலை முதலே சென்னையிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் மிதமாக இருந்தது. இந்நிலையில் தற்போது திடீரென காற்று பலமாக வீசியது. அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே சென்னையின் பல பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை மட்டுமே மழை பெய்தாலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளப்பெருக்குப் போல சீறிப் பாய்ந்தது.
அடையாறு, சாந்தோம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை அடித்து நொறுக்கியது. மழையோடு காற்றின் வேகமும் அதிகமாக இருந்த்தால், முக்கியமான சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பலரும் வாகன நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
அதேபோல் சென்னையின் பல இடங்களிலும் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சில சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் சென்னை நகரின் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதேநேரம் மழை விட்டதும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை.
பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமருந்த நிலையில், திடீரென பெய்த கனமழை சென்னைவாசிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரங்களுக்கு தமிழ்நாட்டில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சென்னைவாசிகள் வெளியே செல்லும் போது குடையுடனும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் இருக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது.