'அம்மாவின் பெயரில் மரம் நடுங்கள்'.... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
''தேர்தலுக்கு பிறகு மீண்டும் 'மன் கி பாத்' வாயிலாக பேசுவேன் என கடந்த பிப்ரவரி மாதம் கூறி இருந்தேன். அதன்படி இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன்''
டெல்லி: அம்மாவின் பெயரில் மரக்கன்று நட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத்' என்னும் நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பேசும் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி இதுவாகும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ''தேர்தலுக்கு பிறகு மீண்டும் 'மன் கி பாத்' வாயிலாக பேசுவேன் என கடந்த பிப்ரவரி மாதம் கூறி இருந்தேன். அதன்படி இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம்' அன்னைக்கு ஒரு மரம் (a tree for mother) என்ற கருப்பொருளின் கீழ் கடைபிடிக்கப்படுகிறது. நான் எனது அம்மாவின் பெயரில் ஒரு மரம் நட்டு விட்டேன். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அம்மாவின் பெயரில் ஒரு மரம் நட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்று கூறினார்.
ஜூலை மாதம் 26ம் தேதி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இது குறித்து பேசிய பிரதமர் மோடி, ''அடுத்த மாதம் இதே நேரத்தில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியிருக்கும். நீங்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளிக்க தயாராக இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் நமது அனைவரின் மனதையும் வென்று விட்டனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க அவர்கள் முழு முயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் தயாராகி வருகின்றனர். நமது வீரர்கள் 900 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நமது வீரர்களின் திறமை வெளிப்பட்டுள்ளது.
டேபிள் டென்னிஸில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவு அணியும் தகுதி பெற்றுள்ளது. இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் மற்றும் குதிரை சவாரி போட்டியில் முதன்முறையாக நமது வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடைசியாக ஆந்திராவின் அரக்கு காபி குறித்து பிரதமர் மோடி பெருமையாக பேசினார். ''ஆந்திராவின் அல்லூரி சீதா ராம் ராஜு மாவட்டத்தில் உற்பத்தியாகும் அரசுக்கு காபி சுவை மற்றும் நறுமணத்துக்கு பெயர் பெற்றது. சுமார் 1.5 லட்சம் பழங்குடியின மக்களால் விளைவிக்கப்பட்டு தயாராகும் அரக்கு காபி உலகளவில் பல விருதுகளை வென்றுள்ளது.
விசாகப்பட்டணத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து அரக்கு காபியை குடித்ததை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன். டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டிலும் அரக்கு காபி பிரபலமாக இருந்தது'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
What's Your Reaction?