சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் சில இடங்களில் 'HUT' ஹிஜ்புத் தஹிரிர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்து கொண்டு அந்த இயக்கத்துக்கு ஆள் சேர்த்தல், உதவி புரிதல் உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக என்ஐஏ எனப்படும் தேசிய புலானய்வு முகமை அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் இபி காலனியில் வசித்து வரும் கபீர் அகமது என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை சாலியமங்கலம் பகுதியில் வசித்து வரும் முஜிபுர் ரகுமான், அதே பகுதியிலோ காந்திஜி சாலையில் வசித்து வரும் ரவுடி அப்துல் காதர், காதர் மொய்தீன், தஞ்சாவூர் குழந்தை அம்மாள் நகரில் வசித்து வரும் அகமது, தஞ்சாவூர் அய்யம்பேட்டை மானாங்கோரை பகுதியைச் சேர்ந்த ஷேக் அலாவுதீன் ஆகியோரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருப்பவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.