சொந்த வீடு வாங்கும் யோகம் வேண்டுமா?.. வாஸ்து தோஷம் நீக்கும் சிறுவாபுரி முருகனை சரணடையுங்கள்

Siruvapuri Balamurugan Temple in Chennai : கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்துவிட்டு நம்பிக்கையுடன் சிறுவாபுரி செல்லுங்கள். சொந்த வீட்டில் குடியேறுவது நிச்சயம்!

Jul 23, 2024 - 17:22
Jul 23, 2024 - 17:31
 0
சொந்த வீடு வாங்கும் யோகம் வேண்டுமா?.. வாஸ்து தோஷம் நீக்கும் சிறுவாபுரி முருகனை சரணடையுங்கள்
Siruvapuri Balamurugan Temple in Chennai

Siruvapuri Balamurugan Temple in Chennai : பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

அதிகாலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை. ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று விளங்கியதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார். 

வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை! மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.


பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.  கிரஹப்பிரவேசத்திற்கு நாள் குறித்துவிட்டு நம்பிக்கையுடன் சிறுவாபுரி செல்லுங்கள். சொந்த வீட்டில் குடியேறுவது நிச்சயம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow