’ஹலோ சார். ஹலோ மேடம்.. பேங்க்ல இருந்து பேசுறோம்.. உங்க கார்டு மேல இருக்க 16 நம்பர் சொல்லுங்க’, என கேட்டு மோசடி செய்யும் காலம் போய், தற்போது, ’நாங்கள் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் பேசுறோம், நீங்க illegal activitiesல ஈடுபட்டிருக்கிங்க, இந்த தொகைய கட்டுங்க..’ என பயமுறுத்தி ஆன்லைனில் வழிபறி செய்யும் காலம் வந்துவிட்டது.
அறிவியல் வளர வளர தங்களது நேக்கு போக்கையும் வளர்த்துக்கொண்டு’ டிசைன் டிசைனாக ஆட்டையை போடுகின்றனர் டிஜிட்டல் கொள்ளையர்கள். அந்த வகையில் 2024ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1,100 கோடி ரூபாய் இணையவழி மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னையில் நடத்த சர்வதேச இணைய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ இணைய பாதுகாப்பு என்பது ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நம்பிக்கையின் தூணாகும். தகவல் திருட்டு தொடர்பாக ஐபிஎம் நிறுவனம் 2024-ல் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 7.9 கோடி சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. உலகளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. டிஜிட்டல் மாற்றத்துக்கான பயணத்தை நோக்கிய நம் பயணத்தில், நம் நாடு சராசரியாக ரூ.19.48 கோடி இழப்பை தகவல் திருட்டின் மூலம் சந்தித்து வருகிறது.
மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஜிட்டல் மோசடிகளை குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. அதன் ஒரு பகுதியாக, போலி அடையாளங்களை வைத்து வாங்கப்பட்ட 50,000 சிம் கார்டுகளையும் முடக்கியுள்ளது தொலைத்தொடர்பு துறை.
இதுகுறித்து, சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம். அப்போது அவர், “இது போன்ற குற்றங்களை பெரும்பாலும் இந்தியர்கள் செய்வதில்லை. சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தான் இந்த மோசடியின் பின்னணியில் இருப்பதாகவும், இது இந்தியா மீது நடத்தப்படும் டிஜிட்டல் போர் தான் என வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறுவது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்கிறது.
சைபர் திருட்டை பொறுத்தவரை நாளுக்கு நாள் பல யுக்திகளை வகுத்து, புதிது புதிதாக நிதி மோசடிகளை செய்து வருகின்றனர், இதனால் இதுபோன்ற விஷயங்களில் சிக்காமல் இருக்க மக்கள் தேவையான டிஜிட்டல் அறிவை பெற்று உஷாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் சொல்கின்றனர்.