IND VS NZ: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்... ஏமாற்றிய இந்திய வீரர்கள்... நியூசிலாந்து அணி முன்னிலை!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
சென்னை: இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இந்நிலையில், நேற்று புனேவில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் லாதம், கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழக சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திர அஸ்வினும் வாஷிங்டன் சுந்தரும் பந்துவீச்சில் மிரட்டினர். அதன்படி வாஷிங்டன் சுந்தர் 59 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து நேற்றே இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் சவுத்தி பந்துவீச்சில் அவுட் ஆக, முதல் நாளில் ஒரு விக்கெட் இழந்து 16 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.
இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால், சுப்மான் கில் தலா 30 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கோலி 1 ரன்னிலும், ரிஷப் பண்ட் 18 ரன்களிலும், சர்ஃப்ராஸ் கான் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 38 ரன்கள் வரை ஸ்கோர் செய்தார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 156 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் லாதம் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். 133 பந்துகளில் 86 ரன்கள் குவித்த லாதம், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல் கான்வே உட்பட மற்ற வீரர்களும் வாஷிங்டன் சுந்தர் – அஸ்வின் சுழல் கூட்டணியில் நடையை கட்டினர். இதனால் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. டாம் ப்ளண்டெல் (Tom Blundell) 30 ரன்களுடனும், க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளை மூன்றாவது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அதிக ரன்கள் முன்னிலை பெற்றால், இந்திய வீரர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?