தமிழ்நாடு

ரொம்ப அசிங்கமா இருக்கு.. வேறு எங்காவது செல்லுங்கள்.. எச்சரித்த கூடுதல் காவல் ஆணையர்

Greater Chennai Traffic Police : வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரொம்ப அசிங்கமா இருக்கு.. வேறு எங்காவது செல்லுங்கள்.. எச்சரித்த கூடுதல் காவல் ஆணையர்
முறைகேட்டில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை என எச்சரிக்கை

Greater Chennai Traffic Police : சென்னை வேப்பேரியில் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் வேப்பேரியில் வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற மூன்று காவலர்களை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேப்பேரி உதவி ஆய்வாளர் ராமசாமி, காவலர்கள் ரமேஷ், ரகுராம் ஆகிய மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், வாகன சோதனையின் போது போலீசார் லஞ்சம் பெற்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தொடர்ந்து இதேபோல் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டால், டிராபிக் பணியை விட்டுவிட்டு வேறு எங்கேயாவது செல்லுங்கள் எனவும், உங்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்டப்பெயர் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

காவலர்கள் இதுபோன்று ஏதேனும் குற்றச்சாட்டுக்கு உள்ளானால், அவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் அல்லது பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், ஒரு சில செய்திகளை பார்க்கும் போதெல்லாம், மிகவும் அசிங்கமாக உள்ளது எனவும் கூடுதல் ஆணையர் சுதாகர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

பல புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், உங்களைப் போன்ற நபர்களால் ஒட்டுமொத்த போக்குவரத்து காவல்துறைக்கும் கெட்டப் பெயர் வருவதாக கூறியுள்ளார். மேலும், ஒருபடி மேலே ஏறினால் உங்களைப் போன்ற நபர்களால், நான்கு படிகள் கீழே இறங்க வேண்டிய நிலைமை ஏற்படுவது நன்றாக இல்லை. இது ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் இறுதி எச்சரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வாகன சோதனையில் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என காவலர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் எனவும், இல்லையென்றால் அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.