சென்னை: இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸில் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஒருபக்கம் கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஓபனராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 56 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்தனர். கேஎல் ராகுல் 16 ரன்களில் வெளியேறினார்.
ஒருகட்டத்தில் 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி பரிதாப நிலைக்குச் சென்றது. ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் ரவீந்திரே ஜடேஜாவும் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை தலைநிமிரச் செய்தனர். தனது சொந்த மண்ணில் அதிரடி காட்டிய அஸ்வின், சென்னையில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி முதல் நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து, 339 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 86 ரன்களில் அவுட் ஆனார். அதேபோல் அஸ்வினும் 113 ரன்களில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய வீரர்களும் விரைவாக பெவிலியன் திரும்பினர். அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளையும், டஸ்கின் அஹமத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் தொடர்ச்சியாக தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் களத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, வங்கதேச அணி 47.1 ஓவர்கள் விளையாடி 149 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் புதிய சாதனை படைத்தார் பும்ரா. அதன்படி, 400 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 81 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், ரோஹித் சர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் சுப்மான் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணியில் டஸ்கின் அஹமத், நஹித் ரானா, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.