Jama OTT Review: தமிழில் உன்னதமான கல்ட் கிளாஸிக் சினிமா… ஜமா ஓடிடி திரைப்பார்வை!
பாரி இளவழகன் இயக்கிய ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெருக்கூத்து கலையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் ஒரு உன்னதமான கல்ட் கிளாஸிக் சினிமாவாக உருவாகியுள்ள ஜமா படத்தின் ஓடிடி விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் தெருக்கூத்து கலை பற்றியெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும் என்பதே மிகப் பெரிய கேள்வி. கிட்டத்தட்ட கலைகளின் வடிவங்கள் அனைத்தும் நவீனங்களின் பிடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழில் இருந்து இப்படியொரு படைப்பா என வியக்க வைக்கிறது ஜமா திரைப்படம். தனது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ‘இராமச்சந்திரன் நாடக சபா’ என்ற ஜமா, தாண்டவம் வாத்தியாரின் தலைமையில் செயல்படுகிறது. அதனை அவரிடம் இருந்து கைப்பற்ற நினைக்கும் தெருக்கூத்து கலைஞன் கல்யாணத்தின் போராட்டம் தான் ஜமா படத்தின் கதை.
திருவண்ணாமலை பகுதியில் தாண்டவம் வாத்தியார் (சேத்தன்) நடத்தி வரும் ஜமாவில், பெண் வேடமிட்டு திரௌபதி பாத்திரத்தில் நடித்து வருகிறான் கல்யாணம் (பாரி இளவழகன்). அர்ஜுனர் வேடமிட்டு கூத்துக் கட்ட வேண்டும் என்ற கல்யாணத்தின் ஆசைக்கு அவரது உடல்மொழியே எதிரியாகிறது. திரெளபதி பாத்திரத்திற்காக சேலை கட்டி பெண் வேடமிடும் கல்யாணம், நிஜத்திலும் பெண்களுக்கான இயல்போடு இருக்கிறான். இதையே காரணமாக வைத்து கல்யாணத்துக்கு அர்ஜுனர் வேடம் கொடுக்க மறுக்கிறார் தாண்டவம் வாத்தியார்.
இன்னொருபக்கம் தாண்டவம் வாத்தியாரின் மகள் ஜெகதாம்பிகா கல்யாணத்தை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஆனால், அர்ஜுனர் வேடம் கட்டி தெருக்கூத்து ஆடுவதும், ஜமாவை மீட்பதும் தான் தனது வாழ்நாள் லட்சியமாக நினைக்கும் கல்யாணம்; இதற்காக எதையெல்லாம் இழக்கிறான், என்ன சாதிக்கிறான் என்பது ஜமாவின் திரைக்கதை. திரெளபதி வேடமிட்டு தெருக்கூத்து ஆடும் பெண் வேடத்தில் பாரி இளவழகனின் நடிப்பும் உடல் மொழியும் அட்டகாசம். படத்தின் இயக்குநராக இருந்தபடி இப்படியொரு கேரக்டரில் நடிப்பது அவ்வளவு சாதாரணமானது கிடையாது. ஆனால், அந்த சவாலை கச்சிதமாக செய்துமுடித்து சபாஷ் போட வைத்துள்ளார் பாரி.
ஜமா படத்தின் பெரும் பலமாக இருப்பதில் சேத்தனின் நடிப்பை குறிப்பிடாமல் இருக்க முடியாது. தெருக்கூத்து கலைஞனாக ஸ்கோர் செய்யும் அதேநேரம், கண்களில் என்னவொரு வன்மம், சூழ்ச்சி, குரூரம். அதிலும் பாரி, அர்ஜுனர் வேடம் கேட்டு வாத்தியாரிடம் பேசவரும் அந்த சிங்கிள் ஷாட் காட்சியில் சேத்தனின் நடிப்பு மிரள வைக்கிறது. தாண்டவம் வாத்தியாரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து தொடங்கும் அந்த சீன், முன்வாசலில் வந்து கல்யாணத்தை சமாதானம் செய்யும் வரை தொடர்கிறது. தனது பாத்திரத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் அக்காட்சியில் இறக்கி வைத்துவிடுகிறார்.
கல்யாணத்தின் தந்தை இளவரசனை ஏமாற்றும் காட்சி, தனது மகளை பண்ணையத்தில் அடிமையாக விட்டுவிட்டு எந்தவித உறுத்தலும் இல்லாமல் வருவது, மொட்டப்பாறை காட்சிகள், இறுதியாக கர்ணனாக வந்து குந்தியின் காலில் விழுந்து மரிக்கும் சீன் என ஒவ்வொரு பந்திலும் சிக்சர்களாக விளாசியுள்ளார் சேத்தன். அதேபோல் இளவரசன் கேரக்டரில் நடித்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா, அம்மு அபிராமி, சேத்தனின் மனைவி, பாரியின் அம்மா கேரக்டர், தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருமே நடிப்பில் அமர்க்களம் செய்துள்ளனர்.
ஜமா படத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது இளையராஜாவின் பின்னணி இசை தான். படம் தொடங்கியது முதல் இறுதிவரை தெருக்கூத்து கலையையும் அதன் வாழ்வியலையும் தூக்கிச் சுமக்கிறது இசைஞானியின் ஸ்வரங்கள். அதேபோல், கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் ஜமா படத்திற்கு கிளாஸிக்கல் டச் கொடுத்துள்ளது. முக்கியமாக ஜமா முழுக்க முழுக்க திருவண்ணாமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கிராமப் பகுதிகள் தான் என்றாலும், விஷுவலாக பார்க்கும் போது அவ்வளவு வெறுமைகளை கண்முன் காட்டுகிறது கோபால் கிருஷ்ணாவின் கேமரா. இது தெருக்கூத்துக் கலைஞர்களின் வறுமையை குறிப்பதாக ரசிகர்கள் புரிந்துகொள்ளலாம்.
வருமானமே இல்லாத ஒரு கலைக்குப் பின்னால், இத்தனை சூழ்சிகள், அதிகார ஒடுக்குமுறை, ஏமாற்றம், பரிதவிப்பு, வெறுப்பு என மனித உணர்வுகளின் கீழ்மைகளும் மேல்மைகளும் ஜமா படத்தில் ஒருசேர காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக திருவண்ணாமலை வட்டார வழக்கு சபாஷ் போட வைக்கிறது. அத்தனை பாத்திரங்களும் திருவண்ணாமலை வட்டார வழக்கில் பேசி படத்தை இன்னும் மெருகேற்றியுள்ளனர். அதேபோல், காதல் காட்சிகள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே பார்த்துப் பழகிய வழக்கமான தேய்மானங்களின் மிச்சமாக இருப்பது திரைக்கதையை தொய்வடையச் செய்கிறது. இரண்டாம் பாதியில் இருந்த மெனக்கெடல், முதல் பாதியிலும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம் என்பதே படத்தின் சிறு குறையாக தெரிகிறது.
ரத்தம், வெட்டு, குத்து, போதைப் பொருட்கள் என தமிழ் சினிமாவின் போக்கு வன்முறை களமாக மாறிவிட்ட நிலையில், ஜமா அதில் ரத்தினக் கல்லாக ஜொலிக்கிறது. தெருக்கூத்தை இவ்வளவு நேர்த்தியாக சினிமாவில் காட்டியதே ஜமா படத்தின் பெரும் வெற்றி எனலாம். தெருக்கூத்து கலையை அப்படியே திரையில் பிரதிபலிக்க ஒட்டுமொத்த படக்குழுவும் உயிரை கொடுத்து அசாத்தியமாக உழைத்துள்ளது. நிஜத்தில் ஜமா போன்ற படங்கள் தான் தியேட்டர் மெட்டீரியல். ஒருவேளை ஜமா படத்தை தியேட்டரில் மிஸ் செய்திருந்தால், கண்டிப்பாக அமேசான் ப்ரைம் தளத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்.
What's Your Reaction?