கருணாநிதி பற்றி சர்ச்சை பாட்டு பாடிய சீமான் மீது வழக்குப்பதிவு.. மன்னிப்பு கேட்பாரா? கைதாவாரா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து பேசிய போது ‘சர்ச்சையான வார்த்தையை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உபயோகித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Aug 31, 2024 - 10:59
Aug 31, 2024 - 12:00
 0
கருணாநிதி பற்றி சர்ச்சை  பாட்டு பாடிய சீமான் மீது வழக்குப்பதிவு.. மன்னிப்பு கேட்பாரா? கைதாவாரா?
seeman

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியை ‘சண்டாளன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடல் பாடி இருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதன் விளைவாகச் சாட்டை துரைமுருகன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக எஸ்சி, எஸ்டி ஆணையம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில், ‘சண்டாளன்’ என்ற சொல் அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அந்த வார்த்தையை இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளில் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்திருந்தனர். மேலும், சண்டாளன் என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குப் பரிந்துரையும் செய்திருந்தது.

இருந்தாலும் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் சாட்டை துரை முருகனைக் கைது செய்யப்பட்டதை விமர்சித்து, ‘நானும் அதே வார்த்தையைச் சொல்கிறேன், முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்’ எனக் கூறி சர்ச்சைக்கு உரிய சொல்லைப் பயன்படுத்தி அதே பாடலை மேடையில் சீமான் பாடி இருந்தார். இதற்குச் சீமான் மீது கடும் கண்டனம் மீது எழுந்தது.சீமான் நாகரீகமாக பேச வேண்டும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார்.

அதன்பிறகு அந்த குறிப்பிட்ட வார்த்தை குறித்து விளக்கம் அளித்த சீமான், அந்த வார்த்தை கிராமப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அந்த வார்த்தையை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிட்டுள்ளார். மேலும் கந்த சஷ்டி கவசத்திலும் அந்த வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். எனினும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் எஸ்.பி அலுவலகம் உட்படப் பல இடங்களில் புகார்கள் அளித்தனர். மேற்கொண்டு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தனர். 

அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞரும் திமுகவைச் சேர்ந்தவருமான  அஜேஷ். கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "கடந்த ஜூலை 11 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி @ naamtamizhar katchi என்ற you tube பக்கத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை பார்த்தேன். அப்போது மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்து இழிவாக சீமான் பேசினார். மேலும் தாழ்த்தப்பட்டோர் சமூகம் குறித்தும் இழிவு படுத்தும் வகையில் பேசினார். இதனால் சீமான் மீது எஸ்சி- எஸ்டி சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று புகாரில் வழக்கறிஞர் அஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது தொடர்பாக பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து ஜூலை 22 ஆம் தேதி அஜேஷ் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  ஆணையத்தில் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த ஆணையம் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன் பிறகு பட்டாபிராம் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று அவர் மீது எஸ்சி- எஸ்டி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்ட்டுள்ளதால் சீமான் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow