Minister Durai Murugan : நான் உங்கள் அடிமை.. சாகும் வரையில் நன்றியோடு இருப்பேன்.. துரைமுருகன் உருக்கம்

Minister Durai Murugan : நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் காட்பாடி, காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.

Aug 31, 2024 - 10:14
Aug 31, 2024 - 17:44
 0
Minister Durai Murugan : நான் உங்கள் அடிமை.. சாகும் வரையில் நன்றியோடு இருப்பேன்.. துரைமுருகன் உருக்கம்
சாகும் வரையில் நன்றியோடு இருப்பேன் என துரைமுருகன் உருக்கம்

Minister Durai Murugan : சித்தூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “பொன்னை ஆற்றின்  குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் மேம்பாலம் கட்டப்படவில்லை. ஆனால் நான் சட்டமன்ற உறுப்பினராக வந்தபோது 1973ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 75ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

அதன் பிறகு இந்தப் பாலம் இடிந்துவிட்ட காரணத்தினால் தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் வரும் நூறு ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்த பாலம் கட்டப்பட்டு இருப்பதால் வரும் நூறு ஆண்டுகளுக்கு என் பெயரைச் சொல்லும்.

நான் என்னுடைய தொகுதியை கோவிலாக நினைத்து பணியாற்றி வருகிறேன். காட்பாடி தொகுதி தான் எனக்கு கோவில். நான் காட்பாடியிலில் இருந்து சித்தூர் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.

என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளனாக இருப்பேன். என் உயிர் பிரிகிற போது கூட என் தொகுதி பெயர் காட்பாடி காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் போகும். என்னை வளர்த்தவர்கள் நீங்கள்” என்று உருக்கத்துடன் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தமிழகத்தில் உள்ள 1281 தரைப் பாலங்களை, உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டுமென தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 906 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பாலங்கள் விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா புறவழி சாலை அமைக்க 9 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு கோப்புகள் அனுப்பப்பட்டு இருக்கிறது. சித்தூர் வரை செல்லும் காட்பாடி சாலையை அகரப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொன்னையில் தற்போது கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்திற்கு மு.க.ஸ்டாலின் என பெயர் வைக்க வேண்டும்” என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow