தமிழ்நாடு

ஆற்காடு சுரேஷ் மனைவி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எகிரும் பரபரப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆற்காடு சுரேஷ் மனைவி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எகிரும் பரபரப்பு..
ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங்

சென்னை: பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை (Armstrong Murder) செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 23 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைப் பின்ணணியில் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் சொல்லப்படுவதற்கு காவல்துறை தரப்பில் தென்னரசு கொலையை சுட்டிக் காட்டி கூறுகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் பாம் சரவணனின் சகோதரருமான தென்னரசு என்பவரைக் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே வைத்து அவரது குடும்பத்தினர் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது. அந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்தது தற்போது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் தான்.

இதனை தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் வைத்து தென்னரசு கொலைக்கு ஒரு கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் தான் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஒற்றைக்கண் ஜெயபால் தலைமையிலான இந்த கூலிப்படைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் நிதியுதவி அளித்தாகவும் கொலையாளிகள் தங்குவதற்கு இடமளித்ததாகவும் ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் நம்பி வந்தனர்.

மேலும், ஆற்காடு சுரேஷ் கொலையின் போது தாக்குதலுக்கு உள்ளாகி தப்பித்த மாது என்கிற பாக்ஸர் மாதவன் என்ற ரவுடியை ஜாம்பஜாரில் உள்ள தனது வீட்டில் அருகே நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது கடந்த ஜனவரி மாதம் 13ம் ஒரு கும்பல் கொலை செய்தது. இது ஆற்காடு சுரேஷ் தரப்பை மேலும் கொதிப்படைய செய்தது. இதற்கும் ஆம்ஸ்ட்ராங் தான் பின்னணியில் இருந்துள்ளார் என ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் கருதினர்.

இதற்கிடையில், ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்களுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் நீடித்து வந்துள்ளது. கட்டப்பஞ்சாயத்துகளில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பொன்னை பாலா தரப்பினருக்கு மீண்டும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நினைவு அஞ்சலி வருவதற்குள் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். அண்ணனின் பிறந்த நாளிலேயே கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட பொன்னை பாலா வாக்குமூலம் அளித்து இருந்தார்.

ஆனால், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை விசாரித்த பட்டினப்பாக்கம் போலீசார் ஏற்கனவே நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் தொடர்பு இருப்பதாக எந்தவித விசாரணை அறிக்கையையும் வழங்கவில்லை. எனினும் ஆம்ஸ்ட்ராங் வழக்கின் கொலையாளிகள் வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து, உண்மையை அறிய, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கணவர் கொலைக்கு பழிக்கு பழிவாங்க மைத்துனர் பொன்னை பாலு உடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டினாரா? என ஆற்காடு சுரேஷ் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆற்காடு சுரேஷ் நினைவு தினமான நேற்று [18-08-24] பொன்னை கிராமத்திற்கு ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி வருவார் என காவல்துறை காத்திருந்த நிலையில், பொற்கொடி இங்கு வராத நிலையில் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பொன்னை பாலுவின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, ஆற்காடு சுரேஷ் மனைவி அவருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் அனுப்பி இருப்பது தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக இந்த பணத்தை கொடுத்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. 

மேலும் ஆற்காடு சுரேஷ் நினைவு இடத்தில் வைத்து அவரது மனைவி பொற்கொடி மற்றும் அவரது மகனை வைத்து சபதம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களையும் போலீசார் சேகரித்துள்ளனர். இதனால் ஆற்காடு சுரேஷ் மனைவியும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் தொடர்புடையவராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பொற்கொடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.