தமிழ்நாடு

ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்! -ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திருப்பம்

Armstrong Murder Case : போலீசாரால் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்! -ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திருப்பம்
ஆம்ஸ்ட்ராங் மற்றும் சம்போ செந்தில்

Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 21 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரபல ரவுடியான சம்போ செந்தில்(Sambo Senthil) மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி சம்போ செந்திலின்(Sambo Senthil) கூட்டாளி தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சம்போ செந்திலுடன் வழக்கறிஞர் சிவா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சிவாவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னையில் காரில் சென்றபோது போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரிஹரன் கைது செய்யப்பட்ட பின்பு வழக்கறிஞர் கிருஷ்ணன், சிவா உட்பட மூன்று பேரும் காரில் திருச்செந்தூர் வரை சென்றதும் அதன் பிறகு காரிலேயே மதுரை சென்று தலைமறைவாக சுற்றி வந்துள்ளனர். அதன் பிறகு கிருஷ்ணன் தனது காரை சிவாவிடம் கொடுத்து சென்னையில் தனது வீட்டில் விடும்படியும் தனக்கு வேறொரு வேலை இருப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

சிவா காரை கொண்டு சென்னைக்கு வரும் வழியில் போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் கிருஷ்ணன் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து தாய்லாந்திற்கு விமானம் மூலமாக தப்பி சென்று இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சம்போ செந்தில் (Chennai Rowdy Sambo Senthil) கொடுத்த பணத்தில் தான், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக 4 லட்சம் பணம், வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியதும், அதனை மலர்கொடி உள்ளிட்ட சிலருக்கு, வங்கியில் செலுத்தி அதனை பணமாக எடுத்துக் கொடுக்க கூறியுள்ளார். இதே போல ஹரிஹரன் மூலமாக தான், வழக்கறிஞர் அருள் மற்றும் பொன்னை பாலு கும்பலை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கனவே ரவுடி சம்போ செந்தில் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில் அவரது கூட்டாளி கிருஷ்ணனும் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.