ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது?

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக சிபிசிஐடி போலீசார் எம்ஆர் விஜயபாஸ்கரை தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Jul 4, 2024 - 10:58
 0
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது?
MR Vijayabaskar

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் 7 பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். 

கடந்த 12 ஆம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில், 22 ஏக்கர் நிலத்தை பறித்துக் கொண்டதாக எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சையின் போது அவருடன் இருக்க வேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமின் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சண்முகசுந்தரம் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து வாதங்கள் நிறைவுற்ற நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் வைத்து எம்ஆர் விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow