சினிமா

Captain Miller: சர்வதேச விருது வென்ற கேப்டன் மில்லர்... இத தனுஷே எதிர்பார்த்திருக்க மாட்டார்!

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் சர்வதேச விருது வென்று அசத்தியுள்ளது.

Captain Miller: சர்வதேச விருது வென்ற கேப்டன் மில்லர்... இத தனுஷே எதிர்பார்த்திருக்க மாட்டார்!
கேப்டன் மில்லர் படத்துக்கு சர்வதேச விருது

சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் இந்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷின் 50வது படமான இதனை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராயனுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. 

ராயன் ரிலீஸுக்கு முன்பே தனுஷ் ரசிகர்களுக்கு இன்னொரு தரமான ட்ரீட் கிடைத்துள்ளது. அதாவது தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பீரியட் ஜானரில் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இப்படத்தை இயக்கியிருந்தார் அருண் மாதேஸ்வரன். ஆக்ஷன் காட்சிகள், மேக்கிங் ஆகியவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும், கதை, திரைக்கதை நன்றாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதோடு வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், இப்படியான படங்களில் தனுஷ் நடிக்கலாமா என்றும் ஃபேமிலி ஆடியன்ஸ் கேள்வி எழுப்பியிருந்தனர். 

கேப்டன் மில்லருடன் வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் நெகட்டிவான விமர்சனங்களே பெற்றது. கேப்டன் மில்லர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி படக்குழு எந்தவித அறிவிப்பும் வெளியிடவே இல்லை. படத்திற்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்கள் காரணமாக தான் கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் வசூலை படக்குழு அறிவிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது கேப்டன் மில்லர். லண்டனில் தேசிய திரைப்பட விழா நடைபெற்றது. அதில் அயலக மொழிப்படத்துக்கான பிரிவில் தனுஷின் கேப்டன் மில்லரும் தேர்வாகியிருந்தது. 

இந்நிலையில், நேற்று லண்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில், சிறந்த அயலக மொழிப்படம் என்ற விருது கேப்டன் மில்லருக்கு கிடைத்துள்ளது. இந்தப் பிரிவில் ஜெர்மானிய படங்களான சிக்ஸ்டி மினிட்ஸ், தி ஹார்ட்பிரேக் ஏஜென்ஸி உட்பட மேலும் படங்களும் போட்டியிட்டன. ஆனால், கேப்டன் மில்லர் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், நெகட்டிவான விமர்சனகளை பெற்ற கேப்டன் மில்லர் படத்துக்கு சர்வதேச விருதா..?, இதனை தனுஷே எதிர்பார்த்திருக்க மாட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இருப்பினும் தனுஷ், கேப்டன் மில்லர் போன்ற ஹேஷ்டேக்-கள் டிவிட்டரில் ட்ரெண்டாகியுள்ளன.