முன்னாள் காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் தரக்கூடாது.. சிபிஐ கடும் எதிர்ப்பு

டிஎஸ்பி காதர் பாட்சா தரப்பில் பொன்மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என சிபிஐ தெரிவித்துள்ளது.

Aug 28, 2024 - 15:14
Aug 29, 2024 - 10:21
 0
முன்னாள் காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் தரக்கூடாது..  சிபிஐ கடும் எதிர்ப்பு
former police ig pon manickavel

முன்னாள் காவல்துறை ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொன் மாணிக்கவேலை  கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் எனவும்  சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி காதர் பாட்சாவை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்து உள்ளதாகவும் சிபிஐ தரப்பு குற்றச்சாட்டியுள்ளது. 

சிலை தடுப்பு பிரிவு காவல் துறை முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், "நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கை டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு, விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. 
ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு  அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல. சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். 

சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனுதாரர் முன்னாள் காவல்துறை மண்டல தலைவராகவும் சிலை கடத்தல் வழக்கை நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தியுள்ளார் தற்போது இவர் மீது சிபிஐ பொய்யான ஒரு குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்துள்ளது இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்தவித மகாந்திரமும் இல்லை எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.


டிஎஸ்பி காதர் பாட்சா தரப்பில் பொன்மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.முன்னால் டிஎஸ்பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் வாதிடுகையில் பொன்மாணிக்கவேல் இந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் விசாரணையை ஒருதலைபட்சமாக நடந்ததாகவும் காதல் பாட்ஷா மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்ததாகவும் அதே நிலையில் உள்ள மற்ற காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார் மேலும் சுபாஷ் கபூர் ஆகியோரை பாதுகாக்கும் விதத்திலும் செயல்பட்டு உள்ளார் எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன்,இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தமிழகத்தில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிப்பில் டிஎஸ்பி காதர் பாட்சா விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கை அப்போதைய காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வந்தார் இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலும் விசாரணை அதிகாரியாக இருந்த காதர் பாட்ஷா மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார் குறிப்பாக சிலை கடத்தல் மன்னனாக இருந்த சுபாஷ் கபூர் தற்போது தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவரை பாதுகாக்கும் வகையில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டு உள்ளார்.

இதன் அடிப்படையில் வந்த புகாரின் அடிப்படையில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் முதல் கட்ட விசாரணை முடித்து பொன்மாணிக்கவேல் மீது போதிய முகாந்திரம் இருந்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இவரை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் உண்மை கண்டறிய முடியும் ஏன் பொய்யாக டிஎஸ்பி காதர் பாட்சாவே இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் சுபாஷ் கபூருக்கு எந்த வகையில் இவர் உதவி செய்தார் என்பதையும் முழுமையாக கண்டறிய முடியும் எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கில் சுபாஷ் கபூருக்கு ஐஜி பொன்மாணிக்கவேல் நேரடியாக உதவி செய்ததற்கான ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.அப்போது சிபிஐ தரப்பில் அதற்கான ஆவணங்களை சீல் இடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். சீலிடப்பட்ட கவரில் உள்ள ஆவணங்களை படித்து பார்த்து வழக்கு விசாரணை தொடரலாம் என கூறிய நீதிபதி இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow