அண்ணனின் பிறந்தநாளில் சம்பவம்.. ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி.. தொடரும் ரத்த சரித்திரம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பழிக்குபழியாக நடந்த கொலை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு முன்னதாகவே சபதமிட்டு கொலை செய்துள்ளனர். அண்ணனின் பிறந்தநாளிலேயே நல்லபடியாக முடிந்தது என்று கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Jul 6, 2024 - 11:09
Jul 6, 2024 - 15:36
 0
அண்ணனின் பிறந்தநாளில் சம்பவம்.. ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி.. தொடரும் ரத்த சரித்திரம்
armstrong murder case

சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார். தற்போது அயனாவரம் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வந்துள்ளார். பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் உள்ள அவரது பழைய வீட்டை இடித்து கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது. அதனை தினமும் பார்வையிடும் ஆம்ஸ்ட்ராங் வழக்கம் போல கட்டுமான பணி நடைப்பெறும் இடத்தின் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.  

திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். உணவு டெலிவரி செய்வது போல வந்து வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் வீரமணி மற்றும் பாலாஜி ஆகியோருக்கும் முதுகு, காது மற்றும் காலின் வெட்டு விழுந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் எப்போதுமே துப்பாக்கி வைத்திருப்பார். கடந்த சில நாட்களாகவே அவரிடம் துப்பாக்கி இல்லை என்பதை அறிந்தே வெட்டி சாய்த்தனர். 

ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆர்ம்ஸ்ராங்கை வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் மற்றும் செம்பியம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து கொலையாளிகள் விட்டுச் சென்ற இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகே உள்ள ஹோட்டலில் டெலிவரி ஊழியர்கள் அடிக்கடி நிற்பது பழக்கம் எனவும் நேற்றிரவு உணவு டெலிவரி ஊழியர்கள் போல மாறுவேடத்தில் வந்து கொலையாளிகள் ஆம்ஸ்டாங்கை கொலை செய்திருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் கொலை சம்பவத்தில் தாங்கள்தான் ஈடுபட்டதாக கூறி எட்டு நபர்கள் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கொலையாளிகள் சரண்

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான  பொன்னை பாலா, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய எட்டு நபர்கள் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு பட்டினப்பக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா தன் அண்ணனின் கொலைக்காக பழிவாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

தென்னரசு படுகொலை

சென்னை புளியந்தோப்பு வெங்கட்டாபுரம் 2 ஆவது  தெருவைச்  சேர்ந்தவர் தென்னரசு. இவர் பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளி. 
வடசென்னை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி செயலாளராக இருந்த இவர் நேற்று காலையில் வெங்கல் தாமரைப்பாக்கம் கூட்டு ரோட்டில் உள்ள  திருமண மண்டபம் முன்பு  படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை சம்பவம் குறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட தென்னரசு மீது 3 கொலை வழக்குகள் உள்பட 23 வழக்குகள் உள்ளன. பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். 

இதன் பின்னர் கட்சி பணிகளில் மட்டுமே தீவிரம் காட்டி வந்த தென்னரசு வெங்கலில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போதுதான், எதிரிகள் அவரை காரில் பின் தொடர்ந்து சென்று, தாய் சகுந்தலா, மனைவி மைதிலி ஆகியோரது கண் எதிரிலேயே வெட்டிக்கொன்றனர்.வெள்ளை ரவியின் கூட்டாளியான தென்னரசு மீது 2004 ஆம்  ஆண்டு சென்னை பெரிய மேட்டில் ஐரிஸ் என்பவரை கொலை செய்த வழக்கும், 2010 ஆம் ஆண்டு நீலாங்கரையில் ரவுடி வெள்ளை உமாவை கொலை செய்த வழக்கும் உள்ளது. இதன் பின்னர் இவர் மீது குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வழக்குகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில்தான் தென்னரசு, படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் அம்பேத்குமார், ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆகிய இருவருமே தென்னரசுவால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அஞ்சியுள்ளனர். இதனால் 2 பேரும் சேர்ந்து தென்னரசுவை கொலை செய்ய திட்டம் போட்டு தீர்த்துக்கட்டினர்.

ஆற்காடு சுரேஷ் படுகொலை

தென்னரசு கொலைக்கு பழி வாங்கும் வகையில்  புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி, பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில்  வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்டார்.ஆற்காடு சுரேஷூடன் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடி மாது (எ) மாதவன் பலத்த வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அரக்கோணம் ஒற்றைக்கண் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி ,  நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார் முத்துக்குமார் , அரக்கோணம் மோகன்,நவீன், போஸ், சுரேஷ் , கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின், சென்னை ஆயிரம் விளக்கு அதிமுக 111 ஆவது வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி என 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  தான், நிதி உதவி, கொலையாளிகளை தங்க வைத்தது என மறைமுகமாக பல உதவிகளை செய்ததாக ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் கருதி வந்துள்ளனர்.

பழிக்கு பழி கொலைகள்

இந்த நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலையின் போது தாக்குதலுக்கு உள்ளாகி தப்பித்த மாது என்கிற பாக்ஸர் மாதவன் என்ற ரவுடியை ஜாம்பஜாரில் உள்ள தனது வீட்டில் அருகே நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது கடந்த ஜனவரி மாதம் 13ம் ஒரு கும்பல் கொலை செய்தது. இது ஆற்காடு சுரேஷ் தரப்பை மேலும் கொதிப்படைய செய்தது. இதற்கும் ஆம்ஸ்ட்ராங் தான் பின்னணியில் இருந்துள்ளார் என ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் கருதினர். இதனையடுத்தே  ஆம்ஸ்டாங்கை கொலை செய்ய திட்டம் திட்டி வந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டு முதலாமாண்டு நினைவஞ்சலிக்கு முன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷ் படுகொலையில், ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆம்ஸ்ட்ராங் உதவியதாலேயே ரவுடி ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்களுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் நீடித்து வந்துள்ளது. கட்டப்பஞ்சாயத்துகளில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பொன்னை பாலா தரப்பினருக்கு மீண்டும் மீண்டும் மோதல் ஏற்பட்டது.

அண்ணன் பிறந்தநாளில் சம்பவம்

இந்த நிலையில் தான் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நினைவு அஞ்சலி வருவதற்குள் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். அண்ணனின் பிறந்த நாளிலேயே கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட பொன்னை பாலா வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்று ஆற்காடு சுரேஷ் பிறந்த நாள் , பிறந்த நாள் அல்லது நினைவு நாளுக்குள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் பிறந்தநாளிலே நல்ல படியாக சம்பவம் முடிந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

தனது அண்ணனை கொலை செய்தது மட்டுமில்லாமல்,  தன்னையும் ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மிரட்டியதால் தனது மனைவி பயத்தில் பிரிந்து சென்றவிட்டதாகவும்,  அண்ணனும் இல்லை மனைவியும் இல்லை என்பதால் தன்னை கொல்வதற்கு முன்பாக கொன்று விட திட்டமிட்டு இருந்ததாகவும், அதற்காக தென்னரசு கொலை வழக்கில் தன்னோடு சிறையில் இருந்தவர்கள், சுரேஷின் கிளப்பில் பணியாற்றும் ஊழியர்கள், மற்றும் ஆதரவாளர்களோடு சேர்ந்து கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலா வாக்குமூலம் அளித்துள்ளார்.


கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்க்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் மூன்று தடவை எச்சரிக்கை அளித்திருந்தனர். இது தொடர்பாக செம்பியம் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை கும்பல் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. எப்போதும் ஆதரவாளர்களோடு இருக்கும் ஆம்ஸ்ட்ராங் தனியாக எப்போது எல்லாம் இருப்பார் என கண்காணித்து கொலை செய்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு முதலே பழிக்கு பழி கொலைகள் தொடர்ந்து வருகிறது. இப்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு யாரை காவு வாங்கப்போகிறார்களோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow