ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: நாளை காலை விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வருகிறது.

Jul 6, 2024 - 21:45
 0
ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: நாளை காலை விசாரணை!
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். செம்பியம் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரிக்க 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பிரபல ரவுடி ஆற்காடு ரவுடி சுரேஷ் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

''இது அரசியல் காரணத்துக்காக நடந்த கொலை அல்ல; இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.  ஆனால் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவறி விட்டதாக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை, தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  அப்போது மருத்துவமனை வெளியே திரண்ட பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள், ''ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதிச்சடங்கு நாளை மதியம் நடைபெற உள்ளது. அவரது உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய ஆதரவாளர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு இரவிலும் தொடர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ''கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை நல்லடக்கம் செய்ய இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது'' சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக இந்த வழக்கை இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார். இதனால் நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் வழக்கு விசாரணை இன்று இரவு நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் பின்பு நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கை, சம்பந்தப்பட்ட  வழக்குகளை விசாரிக்க கூடிய ரோஸ்டர் நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி
தெரிவித்துள்ளார்.

எனவே மாநகராட்சி தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடிய நீதிபதி பவானி சுப்பராயன்தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். எனவே இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிப்பாரா அல்லது பவானி சுப்பராயன் விசாரிப்பாரா என்பது குறித்து நீதித்துறை பதிவாளர் முடிவெடுத்து அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow