ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. திருமாவளவன் அஞ்சலி.. அனைவரும் அமைதி காக்க மாயாவதி வலியுறுத்தல்

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என ஆதரவாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் நாளை சென்னை வருவதாகவும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாயாவதி.

Jul 6, 2024 - 12:05
Jul 6, 2024 - 13:04
 0
ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. திருமாவளவன் அஞ்சலி.. அனைவரும் அமைதி காக்க மாயாவதி வலியுறுத்தல்
armstrong murder mayawathi visit chennai

பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, நான்கு பேர் தனியார் உணவு டெலிவரி செய்யும் ஆடையை அணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது அங்கு பட்டாக் கத்தியுடன் வந்த இருவரும், ஏற்கனவே இருந்த நான்கு பேரும் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கட்சியினர் ஆம்ஸ்ட்ராங்கின் வீடு உள்ள பகுதியில் குவிந்து வருகின்றனர். அதேபோல், பெரம்பூர் பகுதியில் உள்ள முக்கியமான சாலைகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள், இந்த கொலைச் சம்பபத்துக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது மருத்துவமனை முன்பு திரண்ட தொண்டர்கள் ஆம்ட்ராங்கை கொன்றவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று முழக்கமிட்டனர். அதே போல சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திருமாவளவன், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சமூக விரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்த கொடூரத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அன்பு சோகோதரர் ஆம்ஸ்ட்ராங் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை வழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழ்நாட்டில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்.

சென்னை - பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பௌத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அம்மையாரின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை - எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பு சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என, பகுஜன் சமாஜ்வாதி கட்சி தேசிய தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள நபரும், மாநில கட்சித் தலைவருமான ஸ்ரீ கே. ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது சென்னை இல்லத்திற்கு வெளியே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடுமையான/தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, திரு ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் நாளை காலை சென்னை செல்ல திட்டமிட்டுள்ளேன். அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow