Chennai Rain: சென்னையில் பலத்த காற்றுடன் மழை... தாம்பரம், பெருங்களத்தூர் பகுதி மக்களே உஷார்!

சென்னையில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலையில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Aug 7, 2024 - 02:56
Aug 7, 2024 - 02:58
 0
Chennai Rain: சென்னையில் பலத்த காற்றுடன் மழை... தாம்பரம், பெருங்களத்தூர் பகுதி மக்களே உஷார்!
Chennai Rain

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை மெல்ல மெல்ல தீவிரமடைந்து வருகிறது. கடந்த வாரம் கேரள மாநிலம் வயநாடு பகுதிகள் பெய்த கனமழையால், கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தியாவை அதிர வைத்த இந்தச் சம்பவத்தால், மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில், சென்னையில் தற்போது பெய்த கனமழையால் நகர் முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது.

சென்னையில் ஏப்ரல், மே மாதங்களில் அவ்வப்போது பெய்து வந்த மழை, ஜூலையில் கொஞ்சம் தீவிரமடைந்தது. ஆனாலும், கடந்த ஒரு வாரமாக சென்னையின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆகஸ்ட் 4ம் தேதி மாலையில் சென்னையின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. ஆனால், நேற்று (ஆக.5) அதாவது திங்கட்கிழமை வெயில் வாட்டி வதைத்தது. அதேபோல், இன்றும் (ஆக.6) காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் மிக கொடுமையாக இருந்தது.

இந்த நிலையில், மாலையில் இருந்தே சென்னையை கருமேகங்கள் சூழ, சிறிது நேரத்தில் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. சென்னையின் பெரம்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அடையார், கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.  

அதேநேரம் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மழை நிலவரம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, தாம்பரம், பெருங்களத்தூர் உட்பட அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் வெளியே சென்றால் குடையும் போவது நல்லது. இதுதவிர சென்னையின் பிற பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - இந்த 2 திட்டங்களால் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரிப்பு

அதன்படி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில், வரும் 8ம் தேதி கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. அதேபோல், சென்னையிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow