CM Stalin on Magalir Urimai Thogai Scheme in Tamil Nadu : தமிழ்நாட்டின் மாநில திட்டக்குழு கூட்டம் முதலமைச்சரும், திட்டக்குழு தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், திட்டங்கள் மிக விரைவாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்பிறகு கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ''பல்வேறு திட்டங்கள் குறித்த அனுபவங்கள், சிந்தனைகளை திட்டக்குழு வழங்கி வருகிறது. இந்த குழுவின் அறிக்கை தான் தமிழக அரசுக்கு தரப்படும் மதிப்பெண் ஆகும். தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி இருக்கும் காலை உணவுத் திட்டம், மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டத்தால் பயனடைவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
மகளிர் உரிமைத் தொகை(Magalir Urimai Thogai Scheme), கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் மூலமாக பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்டக்குழு பரிந்துரை, ஆலோசனைகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாகி வருகிறது என்று நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிக்கையை முன் மாதிரியாக கொண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளை கூறும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும். கல்வி, வேளாண்மை போன்ற துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொகை ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கி வருவதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 40/40 என மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மகளிர் உரிமைத் தொகையும் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இதேபோல் நகர பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்ற திட்டமும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த தொகையை வேறு செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிகிறது கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். பெண்களின் சமூக பங்களிப்புக்கு இந்த திட்டம் முக்கிய பங்காற்றி வருவதாக திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.