ஆண்டின் கடைசி ஒருநாள் போட்டியை விளையாடுகிறது இந்தியா! - தொடரை சமன் செய்யுமா?

நாளை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி, 2024ஆம் ஆண்டிற்கான கடைசி ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Aug 6, 2024 - 21:49
Aug 6, 2024 - 21:55
 0
ஆண்டின் கடைசி ஒருநாள் போட்டியை விளையாடுகிறது இந்தியா! - தொடரை சமன் செய்யுமா?
2024ஆம் ஆண்டிற்கான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது இந்திய அணி

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுக்க, தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனையடுத்து கொலும்புவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுக்க, பின்னர் களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்களும் படுமோசமாக சொதப்பினர். கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு போட்டிகளிலும் அரைசதங்களை [58 ரன்கள் மற்றும் 64 ரன்கள்] எடுத்தார். மற்ற யாருமே அரை சதத்தை தொடவில்லை. விராட் கோலி முறையே 24 மற்றும் 14 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் முறையே 16 மற்றும் 35 ரன்கள் எடுத்தார்.

அதேபோல், இலங்கை அணியின் பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். குறிப்பாக, இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஜெஃப்ரி வாண்டர்சே முதல் 6 விகெட்டுகளையும் வெளியேற்றி சாதனை படைத்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சரித் அசலங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொலும்புவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய அணி பங்கேற்கும் 2024ஆம் ஆண்டிற்கான கடைசி ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடருக்குப் பிறகு, இந்திய அணி வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் [செப்டம்பர் 19 முதல் - அக்டோபர் 12 ஆம் தேதி வரை] பங்கேற்க உள்ளது. அதனை தொடர்ந்து, நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் [அக்டோபர் 16 முதல் - நவம்பர் 5 வரை] கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

பின்னர், தென் ஆப்பிரிக்கா அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் [நவம்பர் 8ஆம் தேதி முதல் - நவம்பர் 15ஆம் தேதி வரை] விளையாட உள்ளது. இறுதியாக ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் [நவம்பர் 22ஆம் தேதி முதல் - ஜனவரி 7ஆம் தேதி வரை] பங்கேற்று விளையாட உள்ளது. எனவே, இந்த ஆண்டின் இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வெற்றிபெற்று, இலங்கை அணியுடனான தொடரை சமன் செய்யும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow