ஆளுநரை நேரில் சந்தித்த விஜய்.. மனுவில் உள்ளது என்ன?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது கட்சி மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற இக்கட்சியின் முதல் மாநாடு பெரிய அளவில் பேசப்பட்டது. அதில், திமுக-வை விஜய் மறைமுகமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே திமுக- தவெக தொண்டர்களுக்கு இடையே சமூக வலைதளத்தில் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், அடுத்த சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், தவெக தலைவர் விஜய் சமூக வலைதள அரசியல் செய்கிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். அதாவது, ஒரு சம்பவம் நடக்கும் பொழுது களத்தில் இறங்கி மக்களை சந்திக்காமல் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் அறிக்கை மூலமாக தனது கண்டனங்களை தெரிவிப்பதாக பலர் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், விஜய் இரண்டு முறை மட்டுமே களத்தில் இறங்கி மக்களை சந்தித்துள்ளதாகவும் பல கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு பேருந்து மூலம் அழைத்து சென்று நிவாரண உதவிகள் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின் விஜய் முதல்முறையாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தவெக தலைவர் விஜய் ‘திருக்குறள்’ புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். பதிலுக்கு ஆளுநர் ‘பாரதியார் கவிதைகள்’ தொகுப்பை விஜய்கு வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பாக தவெக கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் . ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?