ஆளுநர் வீட்டுப் பக்கம் வண்டியை விட்ட விஜய்.. அரவணைத்த அண்ணாமலை
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்ததை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் முதல் தகவல் அறிக்கை வெளியாகி சர்ச்சையானது. பொதுவாக பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், போக்சோ போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் கூடிய முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியானதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, முதல் தகவல் அறிக்கை நகலையோ சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்களும் சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்தார். சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் , ஆளுநரை சந்தித்து பேசியதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேறுள்ளார். இதுதொடர்பாக, சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டின் போது, ‘எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக நீடிப்பதால் ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்வி எழும்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கும் நெட்டிசன்கள் ‘அந்த பேச்சு இப்ப எங்க போச்சு’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?