புத்தாண்டில் பட்டாசு வெடிக்க தடை.. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார்

புத்தாண்டு அன்று பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Dec 30, 2024 - 16:20
 0
புத்தாண்டில் பட்டாசு வெடிக்க தடை.. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார்
புத்தாண்டு அன்று பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் என மொத்தம் 19 ஆயிரம் காவல் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.  மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் ஆயிரத்து 500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும்  31-ஆம் தேதி இரவு 9 மணியிலிருந்து  சென்னை காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு என மொத்தம்  425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. 

மேலும் 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக  30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி மாலை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் குதிரைப்படைகள் மற்றும்  ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் தகுந்த மாற்றுவழி ஏற்பாடுகளை பயன்படுத்திட வேண்டும்.

கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் (Anti Drowning Unit) இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையாக, எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும்.

அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.  சரக காவல் அதிகாரிகள் மேற்பார்வையில் குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும். Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata Ace போன்ற வாகனங்களில் PA.System, Flickering Light போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.  

பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow