அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Dec 25, 2024 - 12:22
 0
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரும், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கி படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திய பின்,  இருவரும் நடை பயிற்சிக்கு சென்ற நிலையில் அங்கு ஒரு மறைவான இடத்தில் இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.  

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மறைந்திருந்து மாணவர்கள் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், மாணவரை தாக்கிவிட்டு மாணவியிடம் அவர்கள் தனிமையில் இருந்த வீடியோவை காண்பித்து மிரட்டி பாலியன் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றிவிடுவேன் என்று மாணவியை மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி இச்சம்பவம் தொடர்பாக நேற்று இரவு (டிசம்பர் 24) கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்களில் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வெளி ஆட்களின் செயலா? என்பதை அறிய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. 

தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. 

மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow