கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஒவ்வொரு தேவாலயத்திலும் குடில்கள் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதல் அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இந்த சிறப்பான நாள் இயேசு கிறிஸ்துவின் அன்பு மற்றும் இரக்கத்தின் காலமற்ற போதனைகளை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், சமுதாயத்தில் மகிழ்ச்சியை பரப்பவும், சமத்துவத்தை மேம்படுத்தவும், ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் பாடுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய கத்தோலிக்க பேராயர்கள் பேரவை (சிபிசிஐ) நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையைக் காட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில், இயேசு கிறிஸ்துவின் அன்பு, தன்னலமற்ற சேவை, இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற வன்முறையைத் தவிர்த்து, "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்" என்று பொறுமையையும். "ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள்" என ஈகையையும், "பகைவர்களையும் நேசியுங்கள் எனக் கூறி இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான்.
போர்களினாலும். வெறுப்புணர்வினாலும் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் அவர் காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களின் நலனுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் சிறுபான்மையினர் நல ஆணையம், பொருளாதார மேம்பாட்டுக் கழகம். சிறுபான்மையினர் நல இயக்ககம் எனப் பல திட்டங்களை கலைஞர் நிறைவேற்றி வந்துள்ளார்.
அவரது வழியில் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும், ஜெருசலேம் செல்வதற்கான நிதியுதவி 60 ஆயிரம் ரூபாயாக உயர்வு. அதுவும் 2024 முதல் நேரடி மானியமாக அதனை வழங்க ஆணை. 8 தொன்மை வாய்ந்த தேவாலயங்களை மறுசீரமைக்க நிதியுதவி. கரூர், மதுரை, தேனியில் கூடுதல் கிறிஸ்தவ மகளிர் உதவி சங்கங்கள் தொடக்கம். தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 345 மகளிருக்கு 4 கோடியே 32 லட்சம் ரூபாய் நிதியுதவி.
ஏராளமான கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம். முதலிய பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும் சம உரிமையோடும் சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து, அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?