கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Sep 22, 2024 - 09:20
Sep 22, 2024 - 09:22
 0
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?
Kodaikanal

திண்டுக்கல்: கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துபவர்களுக்கு இன்று முதல் ரூ.20 அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சீசன் காலம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். இயற்கை எழில் நிறைந்த மலைகள், நட்சத்திர ஏரி, குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை அவர்கள் பார்வையிட்டு ரசிக்கின்றனர்.

கொடைக்கானலின் பசுமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் இல்லாத கொடைக்கானலை உருவாக்க வேண்டும். அதற்கு 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை கொடைக்கானலில் தடை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த கண்காணிப்பு குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதோடு பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துபவர்கள், விற்பவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பசுமைவரி என்ற பெயரில் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow