காதல் திருமணம் செய்ய மூதாட்டியிடம் நகை பறிப்பு.. தனிப்படை அமைத்துப் பிடித்த போலீஸார்

காதல் திருமணம் செய்ய மூதாட்டியின் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற புதுமாப்பிள்ளையை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Sep 22, 2024 - 09:01
Sep 22, 2024 - 09:05
 0
காதல் திருமணம் செய்ய மூதாட்டியிடம் நகை பறிப்பு.. தனிப்படை அமைத்துப் பிடித்த போலீஸார்
காதல் திருமணம் செய்ய மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் பேச்சாவடி மேகனாப்பள்ளி சாலையை சேர்ந்த அன்பழகன் மனைவி மலர்க்கொடி(67). இவர் கடந்த 19ஆம் தேதி காலை வீட்டின் அருகே சாலையில் நடை பயிற்சி செய்தபோது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் மலர்கொடி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பியோடினார். 

இச்சம்பவம் அறிந்த வந்த மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறை திருமஞ்சன வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் விஜயபாலன்(26) வழிபறி சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். விஜயபாலனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 9 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

விஜயபாலன் கடந்த மார்ச் மாதம் செம்பனார் கோவில் காவல் எல்லைக்குட்பட்ட கீழையூர் பகுதியில் 4 பவுன் தாலிசெயினை பறித்து சென்றதும் தெரியவந்தது. இன்ஜினியரிங் சிவில் பட்டதாரியான விஜயபாலன் ஆன்லைனில் 6 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த கடனை அடைப்பதற்காக பிரத்யேகமாக நம்பர் பிளேட் இல்லாத பைக்கை வாங்கி பயன்படுத்தி வழிபறியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் காதலித்து பெண் ஒருவரை திருமணம் செய்த விஜயபாலன் கையில் காசில்லாததால் மயிலாடுதுறையில் வழிபறியில் ஈடுபட்டு காதல் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து, விஜயபாலனை தனிப்படை போலீசார் 2 நாட்களில் விசாரணையின் அடிப்படையில் தட்டி தூக்கினர். கைதுசெய்யப்பட்ட விஜயபாலனை மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி முன்னிலையில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இரண்டு நாட்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளியை திறம்பட கைது செய்த தனிப்படை போலீசாருக்கு டிஎஸ்பி திருப்பதி பாராட்டு தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow