நீதிமன்ற உத்தரவால் எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை!

எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென, சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nov 15, 2024 - 04:38
Nov 15, 2024 - 04:49
 0
நீதிமன்ற உத்தரவால் எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை!
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்க நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் தற்போதைய புள்ளி விவரங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், ஊழல் வழக்குகள் விசாரணைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்டு தற்போது உயர் நீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்ட வழக்குகளின் விவரங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த விபரங்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேபோல எம்பி - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், தலைமை பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

எம்.பி - எம்.எல்.ஏ.ககளுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட எம்பி - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து பிறப்பித்த உத்தரவின் மூலமாக மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள அந்த வழக்குகளின் விபரங்களையும் அறிக்கையாக அளிக்க வேண்டும் என தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2025 ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow