மருத்துவர் மீது கத்திக்குத்து.. தமிழக அரசை கண்டித்து மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!
அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை கண்டித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு மருத்துவமனைகளில் 20 ஆயிரம் மருத்துவர்களை கூடுதலாக அதிகரிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் நேற்று (நவ. 14) நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தபோது, விக்னேஷ் என்ற இளைஞர் அவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து உடனடியாக மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை கண்டித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடு, பாதுகாப்பு கொடு என கண்டன முழக்கங்களை அரசு மருத்துவர்கள் எழுப்பினர். தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவீததிற்கு மேல் அதிகரித்து உள்ளதால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் 8 கோடி மக்கள் தொகை இருக்கக்கூடிய சூழ்நிலையில், ஆயிரம் மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் குறைந்த பட்சம் 80,000 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய இடத்தில், முப்பதாயிரம் மருத்துவர்கள் கூட பணியில் இல்லாத நிலை தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவுவதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, அரசு மருத்துவர்களுடைய எண்ணிக்கையை கூடுதலாக 20 ஆயிரமாக அதிகரிக்க வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் முதல் அரசிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும், ஆனால் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலும் தாழ்த்துவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு அரசு மருத்துவர்களும் அதிகப்படியான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை இருப்பதாகவும், இதனால் ஒவ்வொரு மருத்துவர்களும் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
தொடர்ந்து பேசிய மருத்துவர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
What's Your Reaction?