கலாஷேத்ரா நடனப் பள்ளி பாலியல் வழக்கின் விசாரணை துவங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!
கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலாஷேத்ரா நடனப் பள்ளியில் கடந்த 1995-2001ம் ஆண்டு வரை படித்த மாணவி, பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சென்னை பெசன்ட் நகரில் கலாஷேத்ரா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். உதவி பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கூறினர்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இறுதி அறிக்கையை கோப்புக்கு எடுத்து, நான்கு வாரங்களில் விசாரணையை துவங்கும்படி, சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
What's Your Reaction?






