பழைய ஓய்வூதிய திட்டம், கருணை அடிப்படையில் பணி வழங்குவது, அரசுத் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கதினர் 24 மணி நேர தர்ணா போராட்டத்தை நடத்தினர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேர தர்ணா போராட்டத்தை நடத்தி இருக்கிறோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறையில் வேலை செய்வதற்கு தயாராக 64 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புத் துறையில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். அரசுத்துறையில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உரிய கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் நிரப்ப வேண்டும்.
அரசுத் துறையில் பணி புரிந்திருக்கும் போதே இருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது 5% சதவீதத்திலிருந்து 25% ஆக மாற்ற வேண்டும் என்கிறபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்று இருக்கிறது.
நான்காண்டு காலமாக இந்த அரசாங்கம் கோரிக்கைகளை அமல்படுத்தும் என்று காத்துக்கொண்டிருக்கக்கூடிய சூழலில் அரசு ஊழியர்களை ஏமாற்றும் போக்கை இந்த அரசாங்கம் கைவிட்டு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
வரக்கூடிய பிப்ரவரி 14ஆம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பாக அனைத்து வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும் மார்ச் 19ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒட்டுமொத்தமாக பணி புறக்கணிப்பு போராட்டமும் நடைபெறும் என்பதை அரசாங்கத்திற்கு தெரிவிக்கிறோம்.
இதையும் அரசு பொருட்படுத்தாமல் இருந்தால் அரசாங்கம் கோரிக்கைகளை பெறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஆசிரியர்கள் போராட்ட இயக்கம் உருவெடுக்கும்.