
ஞானசேகரன் வீட்டில் குடியிருப்பவர்களை வெளியேறச் சொல்லி இந்து சமய அறநிலயத்துறை காலக்கெடு கொடுத்துள்ளது
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் கிண்டி வருவாய் துறை அதிகாரிகள் ஞானசேகரன் வீடு அமைந்துள்ள மண்டபம் சாலை மற்றும் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டனர்.
அங்குள்ள மண்டபம் மற்றும் வீடுகளை அளந்த நிலையில் ஞானசேகரன் வீடு மட்டுமல்லாமல் அருகில் உள்ள அனைத்து வீடுகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அந்த இடம் முழுவதும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிலத்திற்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டதை அடுத்து மயிலாப்பூர் இணை ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு கோவில் நிர்வாக அலுவலர் தலைமையில் தாசில்தார் உள்ளிட்டோர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் சென்னை மாநகராட்சி இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனரா? என்பது குறித்தும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அப்புறப்படுத்தவும் அல்லது வீடுகளை இடிக்கவும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஞானசேகரன் வீட்டை காலி செய்ய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர். அதாவது, ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், ஜனவரி மாதம் இறுதி வரை காலக்கெடு கொடுத்துள்ளனர். அவர்கள் வீட்டு விட்டு வெளியேறிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.