என் மகனை குத்திவிட்டு உடலை கொடுத்திருக்கலாம்.. ரவுடி பன்னீர் செல்வத்தின் தாய் கதறல்
2018-ல் காணாமல் காணாமல் போன ரவுடி பன்னீர் செல்வத்தை எரித்து கொன்றதாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்த நிலையில் என் மகனை குத்திவிட்டு உடலை என்னிடம் கொடுத்து இருக்கலாம் என்று பன்னீர் செல்வத்தின் தாய் கதறி துடித்தார்.
சென்னை புளியந்தோப்பு ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்த நிலையில் காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டு காணாமல் போன ரவுடி பன்னீர்செல்வம் என்ற யானை செல்வத்தை கடத்திச் சென்று ஆந்திரா கூடூர் பகுதியில் வைத்து எரித்து கொன்றதாகவும் அதிர்ச்சி வாக்குமூலத்தை ரவுடி பாம் சரவணன் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி பன்னீர் செல்வம் என்ற யானை செல்வம் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு பன்னீர் செல்வம் காணாமல் போனார். இது குறித்து அவரது தாயார் மங்கை சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து சிஎம்பிடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பன்னீர் செல்வத்தை தேடினர். ஆனால் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது தாயார் மங்கை அப்போதே ரவுடி பாம் சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.
அதற்குள் ரவுடி பாம் சரவணன் தலைமறைவாகி விட்டதால் வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தனது மகனை கண்டுபிடித்து தர போலீஸார் நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் தாயார் மங்கை வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், தனது மகன் பன்னீர் செல்வத்தை எரித்து கொன்று விட்டது தெரிய வந்ததும் தாயார் மங்கை கதறி துடித்தார்.
தனது மகனை கொன்ற ரவுடி பாம் சரவணனை என்கவுண்டர் செய்யுங்கள் என்று கைக்கூப்பி கதறி உள்ளார். 2018-ஆம் ஆண்டில் இருந்து தனது மகனை தேடி வந்தேன். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை. கூட்டாளிகளே எனது மகனை பாம் சரவணனிடம் கடத்திச் சென்று கொடுத்து விட்டனர். எத்தனை பேரை தான் பாம் சரவணன் கொலை செய்வார். பாம் சரவணனை என்கவுண்டர் செய்ய வேண்டும். கொன்று விட்டாவது எனது மகனின் உடலை கொடுத்து இருக்கலாம்.
காவல்துறையினர் கால்களில் விழுந்து கதறினேன். பாம் சரவணன் கடத்தி சென்றுவிட்டாதாக 2018-லேயே போலீஸாரிடம் தெரிவித்து இருந்தேன். குத்திவிட்டு உடலை என்னிடம் கொடுத்து இருந்தால் முகத்தை கடைசியாக பார்த்து இருப்பேனே. பாம் சரவணன் காலில் சுட்டதை விட நெஞ்சில் சுட்டு இருக்கவேண்டும் என்று வேதனையோடு தாயார் மங்கை தெரிவித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் தென்னு என்ற தென்னரசு கொலைக்கு பழிக்கு பழியாக ரவுடி பன்னீர் செல்வத்தை கொன்று விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
What's Your Reaction?