70 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்... கைதானவர்கள் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு?

Drug Smugglers Lin With International Drugs Trafficking Gangs : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 30, 2024 - 23:37
Jul 31, 2024 - 16:12
 0
70 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்... கைதானவர்கள் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு?
சென்னையில் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல்

Drug Smugglers Lin With International Drugs Trafficking Gangs: நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 6 கிலே எடைகொண்ட மெத்தபெட்டமைன் என்ற இந்த போதைப் பொருட்கள், சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் ரகுமான், இப்ராஹிம், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் ஆகிய மூவரை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான குடோன் ஒன்றிலும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 92 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.   

அதேபோல் கைதான நபர்களிடம் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், 70 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் கைதான 3 பேரில் ஒருவர், திமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ராஹிம் என்பவர் ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். அதேபோல் கைதான மூவரும் இதற்கு முன்பாக 2 முறை இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தியுள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி இப்ராஹிம் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், 70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், கைதானவர்களுக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. மேலும், இப்ராஹிம் அவரது கூட்டாளி மூலம் மணிப்பூரில் இருந்து போதைப்பொருட்களை செங்குன்றம் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் மணிப்பூரில் உள்ள போதைப்பொருள் கும்பல் குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தனர். 

எடப்படி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6 கிலோ, ரெட்ஹில்ஸ் அருகே குடோன் ஒன்றில் 1 கிலோ என 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சொல்லாட்சி-செயலாட்சி என்று எதுகை மோனையில் விளம்பர வசனம் மட்டும் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் "செயலற்ற ஆட்சி"யாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம். தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமேனும் அக்கறை இருப்பின், நம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டிருந்தார்.

அதேபோல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.92 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற மூன்று பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். இவர்களில், ராமநாதபுரம் மாவட்டம் திமுக சிறுபான்மை அணி துணைத்தலைவர் இப்ராஹிம் என்பவர் ஒருவர் எனத் தெரிய வருகிறது. சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக், திமுக நிர்வாகியாக பதவியில் இருந்ததும், தற்போது மற்றுமொரு திமுக நிர்வாகி, மிகப்பெரும் அளவிலான போதைப்பொருள்களைக் கடத்த முயற்சி செய்திருப்பது, தலைநகர் சென்னையில் நடைபெற்றிருப்பதும், அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. 

உண்மையில் இந்தக் கும்பலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும், இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப் பொருள்கள் புழக்கம் பெருமளவு அதிகரித்திருப்பதும் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. திமுகவினர் பெருமளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow