யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?.. மின்வாரியம் விளக்கம்!

''குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தலம் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்படும் வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்''

Jul 16, 2024 - 12:13
Jul 18, 2024 - 16:17
 0
யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?.. மின்வாரியம் விளக்கம்!
TNEB BILL HIKE

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் 2.18% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அத்துடன் 2026 - 27 வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.

அதன்படி தமிழ்நாட்டில் மின் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக  மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ''வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட்டு பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு, ஏற்கனவே 4.60 காசு யூனிட் ஒன்றுக்கு பெறப்பட்டு வந்தது. தற்போது 4.80 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.

401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே 6.15 காசு பெறபட்டு வந்தது. தற்போது 6.45 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.501 முதல் 600 யூனிட் வரையில் ஏற்கனவே 8.15 காசு பெறபட்டது. தற்போது 8.55 காசாக உயர்த்தபட்டுள்ளது. 

601 முதல் 800 யூனிட் வரையில் ஏற்கனவே 9.20 காசு யூனிட்டுக்கு பெறப்பட்டது. தற்போது 9.65 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.801 முதல் 1000 யூனிட் வரையில் முன்பு 10:20 காசு வசூலிக்கப்பட்டது. தற்போது 10:70 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. 

1000 யூனிட்க்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 11.25 காசு வாங்கபட்டு வந்தது. இனி 11.80 காசாக வசூலிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டிற்க்கு 50 கி.வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 9.70 காசு, வாடகை ஒரு கிலோ வாட்டிற்க்கு 307 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது யூனிட் ஒன்றுக்கு 10.15 காசு ஆக உயர்த்தியும், வாடகை ஒரு கிலோ வாட்டுக்கு 322 ஆக உயர்த்தபட்டுள்ளது.

112 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 562 ரூபாய் வாடகையாக வசூலிக்கபட்டு வந்தது. தற்போது 589 ரூபாயாக வசூலிக்கபட உள்ளது. புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டு இருந்தது.

மின்கட்டண உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும் மின்கட்டணம் உயரும் எனவும் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடுகள் மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். 

வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண் 222-ன் படி, நிலைக்கட்டணம் (Fixed Charge) இருமாதங்களுக்கு ரூ20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவர். தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தலம் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்படும் வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

இருமாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5 வரை மட்டுமே உயரும். இருமாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.15 வரை மட்டுமே உயரும். 

இருமாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டகள் வரை மின்நுகர்வு செய்யும் 25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25 வரை மட்டுமே உயரும். இருமாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 12 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரை மட்டுமே உயரும். 2.10 லட்சம் சிறு மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்களுக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும்'' என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow