144 Prohibitory Order Issued in Ramanathapuram District : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதியில் அக்டோபர் 30ம் தேதி முத்துராமலிங்க தேவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த இரண்டு பெரும் தலைவர்களின் நினைவு தினமும் குருபூஜையாக கொண்டாடப்படும். இதனால் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பரமக்குடி மற்றும் பசும்பொன்னுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை புரிவார்கள்.
மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்து தியாகி இமானுவேல் சேகரன் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள்.
இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை என சுமார் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த இரண்டு மாதமும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
இதேபோல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழையத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.