தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. ஒன்று திரண்ட தமிழகம்.. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. அதிமுகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Jul 16, 2024 - 12:50
Jul 18, 2024 - 16:17
 0
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. ஒன்று திரண்ட தமிழகம்.. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!
Cauvery Issue

சென்னை: தமிழ்நாட்டுக்கு ஜூலை 12 முதல் ஜூலை 31 வரையில் நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி (11,500 கன அடி) தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா, 11,500 கன அடி நீருக்கு பதிலாக தினமும் 8,000 கன அடி நீர் மட்டும் திறந்துவிட முடிவெடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். 

கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ''முழுமையான காவிரி நீர் பெற முடியவில்லை என்றால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழ்நாடு அரசு நமக்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசிடம் கேட்டு பெற வேண்டும்'' என்று விவசாயிகள், அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசை கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ''தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டுக்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும். இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி.ஆகும். மேலும், IMD-யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டி.எம்.சி அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது.

இந்தச் சூழலில், CWRC-யின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா தர மறுப்பது தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இவ்வாறு, தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. 

காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இந்தக் கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்" என்று ஸ்டாலின் கூறி இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியபடி இன்று காலை தலைமைச் செயலகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முதலில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த கூட்டத்துக்கு தலைமை தங்குவார் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். 

இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  நீர்வளத்துறை செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி, கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சியின் ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஒ.எஸ்.மணியன், பாமக சார்பில் ஜிகே மணி, சதாசிவம், பாஜக சார்பில் கரு.நாகராஜன், கரு.முருகாநந்தம் ஆகியோர் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow