மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி.. திடீரென உள்வாங்கிய வீடால் பரபரப்பு

மெட்ரோ பணிக்காக சுரங்கம் தோண்டும் போது குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் அழுத்தம் காரணமாக மாம்பலம் லாலா தோட்டத்தில் இருக்கும் ஒரு வீடு மட்டும் ஒரு சில இன்ச் உள்வாங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Dec 22, 2024 - 14:19
 0
மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி.. திடீரென உள்வாங்கிய வீடால் பரபரப்பு
சுரங்கம் தோண்டும் பணியால் திடீரென வீடு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டப் பணிகள் நகர் முழுவதும் 118 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெறுகிறது. அதில் 46 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப் பணிகள் மேற்கொள்ளும் நிலையில் கோடம்பாக்கத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ வழித்தடம் சுரங்கமாக மேற்கொள்ளப்படுகிறது. பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையின் நிலவியல் அமைப்புகளை கருத்தில் கொண்டு மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கின. 

இந்நிலையில் கோடம்பாக்கம்- பனகல்பார்க் இடையிலான மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணியின் போது மாம்பலம் லாலா தோட்டம் இரண்டாவது தெருவில் உள்ள ஒரு வீடு  உள்வாங்கப்பட்டது. வீட்டில் பெரிய அளவிற்கு விரிசல் ஏதும் ஏற்படாவிட்டாலும் சில இன்ச் உள்வாங்கப்பட்டதால் வீட்டின் உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மெட்ரோ ரயில் அதிகாரிகள் களத்திற்கு வந்து பரிசோதனையில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள்  விளக்கம் அளித்துள்ளனர். அதில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் தி நகர் பனகல் பார்க் வரையிலான மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணிகளின் போது அழுத்தம் காரணமாக ஒரு குறிப்பிட்ட வீடு சில இன்ச் உள்வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிக அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட வீடு மட்டும் இறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொறியியல் ரீதியான ஆய்வு மற்றும் கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் முழுமையான முடிவு தெரிந்தவுடன் வீட்டின் நபர்கள் குடியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

சென்னையின் நிலவியல் கடினமான பாறை மற்றும் இலகுவான மண் போன்றவற்றை கொண்டிருப்பதால் இது போன்ற சில நிகழ்வுகள் ஏற்படுவதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாம்பலம் இரண்டாவது தெருவில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் முழுமையாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபடும் என்றும் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து வீட்டின் சீரமைப்பு பணிகளுக்கான  செலவுகளை மெட்ரோ ரயில் நிர்வாகமே மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீடு பராமரிக்கும் வரை வீட்டின் உரிமையாளர்கள் குடியேறும் வீட்டிற்கான வாடகை மற்றும் இதர செலவுகளை மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் எனவும் அந்த பகுதியில் இருக்கும் மற்ற வீட்டார் அச்சப்பட தேவையில்லை. மண்ணின் தரம் குறித்து ஏற்கனவே பரிசோதனை மேற்கொண்டாலும் தொடர்ந்து பலமுறை ஆய்வுகளை நடத்தி வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் முதல் கட்ட பணியின் போது அண்ணா சாலையில் ஒரு பகுதியில் சாலை அதிக அளவில் உள்வாங்கப்பட்ட நிலையில் தற்போது பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow