சென்னை: 2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி கைதானார். ஜாபர் சாதிக்கை கைது செய்த டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஜாபர் சாதிக். மேலும், அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கடந்த 28ம் தேதி கைது செய்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜாபர் சாதிக். இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது. ஆனாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. ஏனென்றால் சென்னை அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கைது செய்து இருப்பதாலும், அந்த வழக்கில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பதாலும், அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணையை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஜாபர்சாதிக் டெல்லி திகார் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகவும், அதன்பின்னர் ஜாபர் சாதிக் சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.
ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீரிடமும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக், திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்றும், செல்போனை எப்போதும் இயக்கத்தில் வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல், ஜாபர் சாதிக் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.