காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும் பழனிசாமி.. ஸ்டாலின் விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ’காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார்’ என்று திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் ‘திமுக செயற்குழு கூட்டம்’ நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, ஏழாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் திமுகவின் இலக்கு. 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து, அண்மைக் காலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்கு சதவிகித கணக்கை சொல்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் திருவாளர் குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுற மாதிரி அது இருக்கிறது. காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார் பழனிசாமி.
கடந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்துள்ளதாக உளறுகிறார். இல்லாததை இருப்பதுபோல ஊதிப்பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்கு கைவந்த கலைதான். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19.4 விழுக்காடு வாக்குகளை பெற்றது. இதுவே 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் பெற்றது.
14 தொகுதிகளில் அதிகமா போட்டியிட்ட அதிமுக நியாயமாக பார்த்தால் 32.98 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாகத் தான் வாங்கியது. எளிமையாக சொன்னால் 2019-ஆம் ஆண்டு சராசரியாக ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்கிய அதிமுக, 2024-இல் வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியது. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியா 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக.
கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிரா பாஜக-வை கண்டித்தாரா?, புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரா கீச்சுக்குரலிலாவது கத்தினாரா?, பிரதமருக்கு எதிராக பேசும் துணிவு அவருக்கு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?