“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” - திமுக அரசுக்கு பன்னீர் செல்வம் கண்டனம்!

"சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்" என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Nov 14, 2024 - 22:02
 0
“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” - திமுக அரசுக்கு பன்னீர் செல்வம் கண்டனம்!
“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” - திமுக அரசுக்கு பன்னீர் செல்வம் கண்டனம்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 313-ல், "தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வாக்குறுதி முக்கியமான வாக்குறுதி என்ற அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலினால் செய்தியாளர்கள்முன் வாசிக்கப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 42 மாதங்கள் கடந்த நிலையில், இதுபற்றி வாய் திறக்காதது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மூன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால், திமுக அரசு எதற்கும் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்த வரிசையில், இப்போது சத்துணவுப் பணியாளர்களும் சேர்ந்துள்ளனர். காலமுறை ஊதியம் வழங்குதல், பணிக்கொடையாக ஐந்து இலட்சம் ரூபாய் வழங்குதல், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு வழங்குதல், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டதோடு, திமுக அரசு தங்களை வஞ்சிப்பதாக சத்துணவு ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

திமுக அரசின் வாக்குறுதிகளையும், அந்த வாக்குறுதிகள் எல்லாம் தற்போது நிறைவேற்றப்படாததையும் பார்க்கும்போது, எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டுமென்பதற்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்பது தெளிவாகிறது. எது எப்படியோ, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசுக்கு உண்டு. முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக நியமித்து காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow