'சூர்யா 44' படத்தின் தலைப்பு இதுதான்.. இணையத்தில் வைரலாகும் டீசர்

‘சூர்யா-44’ படத்திற்கு ‘ரெட்ரோ’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Dec 25, 2024 - 13:05
 0
'சூர்யா 44' படத்தின் தலைப்பு இதுதான்.. இணையத்தில் வைரலாகும் டீசர்
சூர்யாவின் 44-வது படத்திற்கு ‘ரெட்ரோ' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ்  ‘பீட்சா’, ‘இறைவி’, ‘ஜிகர்தண்டா, ‘ஜிகர்தண்டா 2’ உள்ளிட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.  ’சூர்யா 44’ என அழைக்கப்படும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ’சூர்யா 44’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியது. தொடர்ந்து, ஊட்டி, கேரளம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சரண் நடனமாடியுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  ‘சூர்யா- 44’ திரைப்படத்தின் தலைப்பு குறித்த டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்திற்கு ‘ரெட்ரோ’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. 'என் பிறப்பிற்கான நோக்கம் காதல், பரிசுத்த காதல்’ போன்ற வசனங்கள் அடங்கிய இப்படத்தின் டைட்டில் டீசரை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

பொதுவாகவே,  கார்த்திக் சுப்பராஜ் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அதிலும், தற்போது அவரது இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் வசூல் மூன்றாம் நாளிலே சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow