‘தேவா’வாகக் களமிறங்கும் ரஜினிகாந்த்...... ரசிகர்களை மெர்சலாக்கிய ‘கூலி’ ஸ்டில்!

‘கூலி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Sep 2, 2024 - 23:51
Sep 3, 2024 - 15:48
 0
‘தேவா’வாகக் களமிறங்கும் ரஜினிகாந்த்...... ரசிகர்களை மெர்சலாக்கிய ‘கூலி’ ஸ்டில்!
‘தேவா’வாகக் களமிறங்கும் ரஜினிகாந்த்

'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த்  'ஜெயிலர்' படத்திற்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கிய 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்ட நிலையில் அக்டோபர் 10ம் தேதி 'வேட்டையன்' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. 

இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'கூலி'. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம், கைதி என மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் கூட்டணி வைத்துள்ளதால்  'கூலி' படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ளன. 'கூலி' படத்தில் இவர்ளின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் தினமும் வெளியாகி வருகின்றன. 

மலையாள திரைப்படங்களான 'கும்பலாங்கி நைட்ஸ்', 'மஞ்சுமெல் பாய்ஸ்' ஆகிய படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் 'சௌபின் சாஹிர்' கூலி படத்தில் 'தயாள்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' நாகார்ஜுனா 'கூலி' படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டது. 

இதன்பிறகு நடிகை ஸ்ருதிஹாசன் 'பிரீத்தி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் 'ராஜசேகர்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டு மொட்டை தலையுடன்  சத்யராஜ் இருக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டது. சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி, சத்யராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னட திரையுலகின் 'சூப்பர் ஸ்டார்' உபேந்திரா 'கூலி' படத்தில் 'கலீசா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கொக்கியை கையில் வைத்திருக்கும் உபேந்திரா, முறைத்துப் பார்க்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

இந்நிலையில் ‘கூலி’ படத்தின் ஆணி வேரான ரஜினிகாந்த், ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கருப்பு சட்டை, கலைந்த தலைமுடி என்ற ரக்கட் லுக்கில், கையில் 1421 என்ற கூலி பேட்ஜுடன் ரஜினி இருக்கும்படியான போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது. சும்மாவா சொன்னாங்க.... வயசானாலும் அவரு அழகும்... ஸ்டைலும்.... இன்னும் அவர விட்டு போகல....

ரஜினிகாந்த்துக்கு ‘தேவா’ என்ற பெயர் மிகவும் ராசியான பெயர் என்றே கூறலாம். 1978ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘தப்பு தாளங்கள்’ திரைப்படத்திலும் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். அதுபோக ‘தளபதி’ படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்த மம்மூட்டியின் கதாபாத்திரம் பெயரும் ‘தேவா’ என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow