மாணவிக்கு நடந்த கொடூரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு
மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியான சதீஷிற்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சத்ய பிரியாவும் அதே பகுதியில் வசித்து வந்த சதீஷும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சதீஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் சத்ய பிரியா அவரை விட்டு பிரிய துவங்கியதாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சதீஷ், அவ்வப்போது சத்ய பிரியாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
ஆனால், சத்ய பிரியா, சதீஷின் காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்ய பிரியாவை தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு தள்ளிவிட்டார். இதில், சத்ய பிரியா உயிரிழந்த நிலையில் சதீஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை சென்னை அல்லி குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்பு நடைபெற்று வந்தது. விசாரணையின் போது சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 27-ஆம் தேதி அறிவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, சதீஷ் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி அவருக்கான தண்டனை விவரம் இன்று (டிசம்பர் 30) அறிவிக்கப்படும் என்று கூறினார். அதன்படி, குற்றவாளி சதீஷிற்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
What's Your Reaction?